
கொக்குவிலின் வரலாறு
கொக்கு என்றால் கரும்பு. இதனால் கொக்குவில் கரும்பு வில் என்று பொருள்படும். இரண்டாம் பொருள் வில் என்பது சங்க காலத்தில் குளம் என்று பொருள். கொக்குவில் கொக்குகள் நிறைந்த குளம் உடைய ஊர் என்று பொருள்படும்அந்நாளில் கொக்குப் பறவைகள் சோலைகளில் நிறைந்து காணப்பட்டதால் இக்கிராமம் கொக்குவில் எனப் பெயர் பெற்றது. இதனைத் திரு. எஸ். சபாரத்தின முதலியார் மற்றும் திரு. செ. வேலாயுதபிள்ளை போன்றோர் தங்கள் பிரபந்தங்களில் புகழ்ந்து பாடியுள்ளனர்.
கொக்குவில் (Kokuvil) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமப் பிரிவில் உள்ள ஓர் ஊர் ஆகும். கொக்குவிலின் எல்லைகளாக வடக்கே தாவடி, கோண்டாவிலும், கிழக்கே திருநெல்வேலியும், தெற்கே வண்ணார்பண்ணையும், மேற்கே ஆனைக்கோட்டையும் அமைந்துள்ளன.
யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை நெடுஞ்சாலை கொக்குவிற் கிராமத்தை ஊடறுத்துச் செல்வதால் நெடுஞ்சாலைக்குக் கிழக்காக, கொக்குவில் கிழக்கென்றும், நெடுஞ்சாலைக்கு மேற்காக கொக்குவில் மேற்கென்றும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தது.
பின்னர் 1990 களில் கோயில்வீதி, பிரம்படி ஒழுங்கை என்பவற்றிற்கு கிழக்காக கொக்குவில் கிழக்கென்றும், நீதிராசா வீதியை அச்சாக கொண்டு அதற்கு மேற்காக கொக்குவில் மேற்கென்றும், இவ்விரண்டிற்கும் இடையேயான பகுதியை கொக்குவில் மத்தி என்றும் மூன்று கிராமசேவகர் பிரிவுகளாக்கப்பட்டு இருந்தன.
இன்று அவை மேலும் பல கிராமசேவகர் பிரிவுகளாக்கப்பட்டு அரசாங்கச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிராம சேவையாளர் பிரிவுகள்
J/121 கொக்குவில் வடகிழக்கு
J/122 கொக்குவில் கிழக்கு
J/123 கொக்குவில் தென்கிழக்கு
J/124 கொக்குவில் வடமேற்கு
J/125 கொக்குவில் மேற்கு
J/126 கொக்குவில் மத்திகிழக்கு
J/127 கொக்குவில் தென்மேற்கு
J/128 கொக்குவில் மத்திமேற்கு
கொக்குவில் கிராமமானது மணியங்காடு, கேணியடி, குளப்பிட்டி, ஆடியாமடம், கற்புலம், காட்டுப்புலம், கரவில்லடி, நீங்காமூலை, தலையாளி, பிரம்படி, கோணாவளை, பொற்பதி , நந்தாவில், மாத்தனை போன்ற பல குறிச்சிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.